மானுடவியல் என்பது மனித இனம் பற்றிய ஆய்வுத் துறை ஆகும். இப்பிரபஞ்சப் படைப்புகளுள் மாந்திரினம் என்பது மகத்தானது. ஆதலால் தான் ஒளவையும் “”அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது”” என்று சொல்லி இருக்கிறாள். உலக உயிரின வரலாற்றில் மனித இனம் கடந்து வந்த பாதையோ மிக நீண்ட நெடியது. ஆடை கட்டும் அறிவு கூட இல்லாமல் அடுத்த வேலை உணவுக்காக அங்கும் இங்கும் அலைந்து திரிந்த மனிதன் புவியீர்ப்பு விசையையும் உந்தித் தள்ளி விண்வெளியைத் தொட்டிருக்கும் இன்றைய மனித குலத்தின் பரிணாமத்தைத் தேடிப் பார்க்க வேண்டியது தேவையானதாகும். இத்தகைய நோக்கத்தின் அடிப்படையில் மானுடத்தை அணு அணுவாய் ஆராய்ந்து வரும் அறிவு துறையே மானுடவியல். இது அனைத்து இடங்களிலும் வாழுகின்ற எல்லாக் காலத்து மக்களையும் அவர்களது சமூக நிலை, பண்பாட்டு நிலை, உயிரியல் நிலை போன்ற வேறுபட்ட நிலைகளின் விரிந்து பரந்த அளவில் ஆராயும் அறிவுத் துறையாகும். மனிதனைப் பற்றியும் அவனோடு தொடர்புடைய, அவனால் உருவாக்கப்பட்டவைகளுமாகிய கலை, இலக்கியம், கலாச்சாரம், தொழில், சமயம், அரசியல், விஞ்ஞானம், மருத்துவம், தொழில்நுட்பம், வரலாறு உள்ளிட்ட ஒட்டுமொத்த வாழ்வியல் கூறுகளையும் பற்றி ஆராய்ச்சி நோக்குடன் அணுகுதல் போல் மாந்தர்கள் பேசுகிற மொழி குறித்தும் இத்துறை ஆராய்ந்து வருகிறது. பல்துறை வளர்ச்சியின் ஊடாக மானுடவியல் துறையும் வேறுபட்ட வடிவங்களில் வளர்ந்து வருகிறது. அங்ஙனம் வளர்ந்து வருகிற மானுடவியலின் வேறுபட்ட பிரிவுகளுள் மொழிசார் மானுடவியல் என்பதும் ஒன்று. இது, மொழி எவ்வாறு சமூக வாழ்க்கையில் செல்வாக்குச் செலுத்துகிறது என்பதை அறிய விழையும் ஒரு அறிவுத் துறையாகும். கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக மொழி அமைப்பு பண்பாடு ஆகியவை தொடர்பான அம்சங்களை உள்ளடக்கியதாக இது வளர்ந்து வருகிறது. கால மாற்றங்களுக்கு ஏற்ப மாறி வருகின்ற வாழ்வியலின் பல்வேறு கூறுபாடுகளுக்கு மத்தியில் மக்களுடைய பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் இருந்து வருகின்ற மொழி மட்டும் விதிவிலக்கானது அல்ல. அதுவும் பலவாறான பொருள் மற்றும் சொல் மாறுதல்களை அடைந்து வந்திருக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழ்ச் சொல்லாடல்கள் பல இன்று வழக்கில் இல்லை. அன்றைய காலகட்டங்களில் இல்லாத சொல் வழக்குகள் பலவும் பேச்சு வழக்குகள் சிலவும் இன்று புதிதாய்த் தோன்றி இருக்கின்றன. இது காலத்தின் கட்டாயம் என்பதை “பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வலுவல” எனத் தொல்காப்பியன் அன்றே நியாயப்படுத்தி இருக்கிறான். அந்த வகையில் மானுடத்தின் சரி பாதிப் பங்குதாரர்களாகிய பெண்கள் புதியபுதிய சொல்லாடல்களை படைப்பிலக்கியங்களில் புனைந்து வருகிறார்கள். மானுடத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் மட்டுமே அல்லாமல் அம்மானுடத்தின் பிரச்சினைகளைப்பேசுவதும் மானுடவியலே. மானுட உற்பத்தியின் மறுக்கவியலாச் சக்திகளாகிய பெண்கள் தங்களுடைய பிரச்சினைகளை மொழியிலே பேசுகிறார்கள். ஆகவே இது மொழிசார் மானிடவியல் ஆகும். மொழி என்பது மனித இனத்தின் கருத்துப் பரிமாற்றக் கருவியாகும். இது அவரவர்க்கு ஏற்றவாறு பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டு நிற்கிறது. சென்ற நூற்றாண்டுகளில் இல்லாத புதிய மொழி ஒன்று இந்த நூற்றாண்டில் உருவாகி இருக்கிறது.இதனை பெண்ணியவாதிகள் பெண்மொழி எனப் பெயரிட்டு அழைக்கிறார்கள். இத்தகையபெண்ணியவாதிகளின் வரிசையில் பேசப்படத்தக்கவராக விளங்குபவர் கவிஞர் சுகிர்தராணியும் ஒருவர். இவருடைய கவிதைகளில் வெளிப்பட்டு நிற்கிற பெண் மொழியின் வீச்சையும் வீரியத்தையும் வெளிப்படுத்துவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
shanlax (Mon,) studied this question.