தமிழ் சிற்றிலக்கிய மரபில் குறவஞ்சி இலக்கியம் தேசி கலை வடிவமாகப் பொதுவாக வகைப்படுத்தப்படுகிறது. இருப்பினும், இதில் வெளிப்படும் நவரச அனுபவம் மார்கி அழகியலின் அடிப்படை ரசக் கோட்பாடுகளுடன் ஆழமாக இணைந்துள்ளது. இவ்வாய்வு, மார்கி-தேசி எனும் இருவகைக் கலைக் கோட்பாட்டின் அடிப்படையில் குறவஞ்சி இலக்கியத்தில் நவரசங்கள் எவ்வாறு உடல், மொழி, சூழல் ஆகியவற்றின் வழியாக உருவாக்கப்படுகின்றன என்பதை ஆராய்கிறது. மேலும், நாட்டிய சாஸ்திரத்தில் கூறப்படும் ரசவியலும், குறவஞ்சி இலக்கியத்தின் தேசி வெளிப்பாடுகளும் பரஸ்பரம் எதிர்மறை அல்ல; ஒருங்கிணைந்த அழகியல் செயல்முறை என இக்கட்டுரை நிறுவுகிறது. இவ்வாய்வின் முக்கிய நோக்கங்களாக மார்கி-தேசி கலைக் கோட்பாட்டின் அழகியல் அடித்தளத்தை விளக்குதல், குறவஞ்சி இலக்கியத்தை தேசி கலை வடிவமாக அடையாளப்படுத்துதல், குறவஞ்சி இலக்கியத்தில் நவரசங்கள் எவ்வாறு இயல்பாக வெளிப்படுகின்றன என்பதை ஆராய்தல், தேசி வெளிப்பாடுகள் வழியாக மார்கி ரச இலக்கு எவ்வாறு அடையப்படுகிறது என்பதை நிறுவுதல் போன்றன அமைகின்றன. மேலும் இவ்வாய்வு, தமிழ் சிற்றிலக்கியங்களின் அழகியல் ஆய்வில் குறவஞ்சியை மையமாக்கி, இலக்கியம்&நடனம் - அழகியல் ஆகிய துறைகளுக்கிடையிலான தொடர்பை விளக்குவதால் முக்கியத்துவம் பெறுகிறது. இவ்வாய்வு விபரண ஆய்வு முறையை அடிப்படையாகக் கொண்டது. நாட்டியசாஸ்திரம், அபிநயதர்ப்பணம் போன்ற பரதநாட்டிய சாஸ்திர நூல்கள் முதன்மை ஆதாரங்களாகவும், குறவஞ்சி இலக்கியப் பாடல்கள், தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் மற்றும் நவீன ஆய்வுகள் இரண்டாம் நிலை ஆதாரங்களாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
Shanlax (Sun,) studied this question.