மானிடவியலின் மகத்தான பணி மனிதப் பண்பாட்டின் படிமலர்ச்சி நிலைகளை மீட்டுருவாக்கம் செ#வது எனத் தீர்மானிக்கப்பட்டது. குறிப்பாக, மக்களிடையே நிகழ்ந்த தொழில் நுட்ப மாற்றங்கள், குடும்ப அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள், பொருளியல் மாற்றங்கள், சமய மாற்றங்கள், சமூக அமைப்பில் ஏற்பட்ட பிற மாற்றங்கள் முதலானவற்றை மீட்டுருவாக்கம் செய்வது உடனடித் தேவை என வலியுறுத்தப்பட்டது. மானிடவியலர்கள் மேற்குறிப்பிட்ட ஆய்வுகளில் இறங்கிய உடனேயே மிகத் தொடக்கக் காலத்தில் வாழ்ந்த மக்களை ஆராய வேண்டியது அவசியமென்றும், அதன் மூலமே தொடக்கக்கால மக்களின் சமூகப் பண்பாட்டு முறைகளின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ள முடியுமென்றும், அவ்வடிப்படைகளைக் கொண்டே தொடக்கக் காலம் முதல் இக்காலம் வரையிலான சமூகப் பணபாட்டு அமைப்புக்களின் படிமலர்ச்சித் தொடர்ச்சியைக் காலவரிசைப்படி அறிய முடியுமென்றும் நம்பினர். இன்று மிகவும் எளிய நிலையில் வாழும் தொல்குடிகள் மிகத் தொடக்கக் காலத்தில் வாழ்ந்த மக்களின் பேராளிகள் என்பதால் அம்மக்களை விரிவாக ஆராய முற்பட்டனர். மனித சமூகத்தின் இயக்க ஆற்றலையும் பண்பாட்டுக் கோலங்களையும், மனித நடத்தைமுறைகளையும் முழுமையாக ஆராய்வதே மானிடவியலின் இலக்காயிற்று.
shanlax (Wed,) studied this question.