தமிழர்களின் ஐந்திணை ஒழுகலாற்றில் முல்லை நிலம், காடும் காடு சார்ந்த பகுதிகளையும் சுட்டுகின்றது. கானகம் தொல்பழங்குடிகளின் நிலமாகும். அத்தகு கானகத்தைக் களமாகக் கொண்டு கானகன் புதினம் விரிகின்றது. பளியர்களின் வாழ்வியல் மற்றும் நம்பிக்கை கதைப்போக்கிற்கு வளர்ச்சியை அளிக்கின்றது. பளியர்களின் குலதெய்வம் பளிச்சியம்மன். கானக விலங்கான புலி பளிச்சியம்மனின் ஆன்மாவின் குறியீடாக அமைகின்றது. பளிச்சி, தாய்ப் புலியைக் கொன்ற தங்கப்பனைக் குட்டிப்புலி வடிவில் வந்து கொல்லும் எனும் பளியர்களின் நம்பிக்கை கானகன் புதினத்தின் மையக்கருவாக அமைகின்றது. தங்கப்பன் எனும் வேட்டைக்காரனின் வீரமும் வீழ்ச்சியும் புதினத்தின் மையப்புள்ளியாக அமைகின்றது. தங்கப்பனுக்கும் அவனது வளர்ப்பு மகன் வாசிக்கும் புலிக்கும் இடையிலான உணர்வுப்போராட்டம் புதினத்தின் வளர்ச்சி நிலைக்கு வலுசேர்க்கின்றது. கானகப் பழங்குடிகள் நகரமயமாதலால் எதிர்கொள்ளும் அனைத்துச் சிக்கல்களையும் கானகன் புதினமும் காட்சிப்படுத்துகின்றது. அத்தகு கானகன் புதினம் வெளிப்படுத்தும் சமூகமதிப்புகளைத் தொகுத்தளிக்குமாறு இக்கட்டுரை அமையலாகின்றது.
Shanlax (Sun,) studied this question.