களம் என்பது இடம். மனிதர்களின் அக வாழ்வு நிலையில் நாடும் வீடும் களமாயின. மனிதர்களின் புற வாழ்வு நிலையில் (போர்) போர்க்களம் என்றாயின. மனிதனின் வாழ்வில் மண் சிறப்பிடம் பெறுகின்றது. மனிதனின் வாழ்வை அவன் வாழும் சூழல் தீர்மானிக்கிறது. அச்சூழலுக்கு ஏற்பவே மனிதனின் எண்ணங்களும் செயல்பாடுகளும் அமைகின்றன. இதனையுணர்ந்த நம் சங்கச் சான்றோர் இயற்கையோடு இயைந்து வாழ்ந்ததோடு இல்லாமல் தம் வாழ்க்கை நிகழ்வுகளை அகம், புறம் என்ற பிரிவிலும் முதல், கரு, உரி என முப்பொருள் கூறுகளிலும்வெளிப்படுத்தியுள்ளனர். இதனையறிந்துதான் காட்சிப் பொருளாக, கருத்தியல் பொருளாகப் பரந்து விரிந்து கிடக்கும் உலகியல் பொருளை முதல் கரு உரிப்பொருளில் அடக்கி பொருளிலக்கணத்தை வகுத்தார். “நிலம் என்பது மனிதன் தோன்றுவதற்கு முன்பே உருவான ஒன்று. இவ்வியல்பினை உடையது உலகத்து மக்கள் உருவாகி நிலைபெற ஆதாரமாக அடிப்படையாக அமைந்தது. இவ்வியற்கை மக்கள் வாழ்க்கையில் கலந்துள்ளன. இவ்வியற்கை தோன்றிய பின்புதான் மனிதன் தோன்றினான். இயற்கை முன்பிருந்தது. மனிதன் பின் வந்தான். மூன்றாவதாக வந்தது இலக்கியம்” என்பார் தனிநாயக அடிகள். “20&ம் நூற்றாண்டின் அறிவியல் தந்தையான ஐன்ஸ்டீனின் ஒப்புமைக் கொள்கைக்கு அடிப்படையே இந்நிலமும் காலமும்தான். இவ்விரண்டின் தொடர்பு விகிதங்களால் தான் வான்வெளிப் பயணம் இயைவதாயிற்று. இத்துணை சிறப்பினையுடைய இவற்றை முதற்பொருள் எனக் கருதி இலக்கணம் வகுத்த தொல்காப்பியத்தின் பெருமை வியத்தற்குரியது”
shanlax (Wed,) studied this question.